குறள் 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

மு.வ உரை:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

குறள் 184:

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

மு.வ உரை:
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

குறள் 183:

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

மு.வ உரை:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.

குறள் 182:

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

மு.வ உரை:
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

குறள் 181:

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

மு.வ உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.