குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

மு.வ உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

குறள் 190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

மு.வ உரை:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

குறள் 189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

மு.வ உரை:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

குறள் 188

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

மு.வ உரை:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

குறள் 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

மு.வ உரை:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்

குறள் 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

மு.வ உரை:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்